பிச்சைக்காரன் வாழ்வில்

Tamil Movie - Pichaikkaran Review - Vijay Antony, Satna Titus, Sasi, Vijay Antony, Tamil Movie Actor, Actress
பெரும் கோடி சொத்துகளுக்கு அதிபதி விஜய் ஆண்டனி, விபத்தில் அடிபட்டு கோமாவில் இருக்கும் தன் தாயை காக்க வேண்டி ஒரு மண்டலம் (அதாவது 48 நாட்கள்) யாருக்கும் தெரியாமல் பிச்சைக்காரனாக வாழ நினைக்கிறார். அப்படி வாழும் அவர் பிச்சைக்காரன் வாழ்வில் எதிர்க்கொள்ளும் சோதனைகளையும், வேதனைகளையும் எப்படி வெற்றிகரமாக கடந்து தனது 48 நாட்கள் பிச்சைக்காரன் வாழ்வை முடிக்கிறார் என்பது தான் கதை.  விஜய் ஆண்டனியின் வேண்டுதல் நிறைவேறி அவருடைய அம்மா குணமானாரா? தனக்கு வரும் இன்னல்களை முறியடித்தாரா? என்பதை சசி மிக உணர்ச்சிப்பொங்க கூறியிருக்கிறார்.

படம் தொடங்கிய 15 நிமிடங்களுக்குள் பார்வையாளர்களை முழுமையாகத் தன்னுள் ஈர்த்துக்கொள்கிறது இயக்குநர் சசியின் திரைக்கதை. ஒரு கோடீஸ்வரன் பிச்சைக்காரனாக வாழ்வதெல்லாம் நடக் கிற கதையா என்ற கேள்வி எழாத வண்ணம் திரைக்கதையை அமைக்கிறார். கதையின் பின்புலத்தின் மீதும் கதாபாத்திரங்களின் மீதும் போதுமான நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் இதைச் சாதிக்கிறார்.
இசையமைப்பாளராக தனக்கான ஒரு வட்டத்தை போட்டு வளம் வந்த விஜய் ஆண்டனி, தன்னால் இந்த கேரக்டரிலும் ஜொலிக்க முடியும் என டாப் ஹீரோக்களுக்கு சவால் விட்டிருக்கிறார். சாந்தமான நடிப்பு, அமைதியான காதல் அப்ரோச், ஆரவாரம் இல்லாத ரியாக்‌ஷன், சிறிது ஆக்‌ஷன்  என அனைத்திலும் நன்றாகவே தேர்ச்சி பெற்றுள்ளார். டிராபிக் போலீஸிடம் மாட்டிக்கொண்டு பிச்சை எடுத்த காட்சிகளை சொல்லும்போது சபாஷ் பெறுகிறார். பைத்திய பெண்மணிக்கு உதவுவதிலும், தன் செல்வாக்கை எந்தவொரு இடத்திலும் காட்டாமலும் அசத்தியிருக்கிறார்.
நாயகி சேத்னா தனது நடிப்பின் மூலம் நம்மை அட்ராக் செய்துவிடுகிறார். தனது காதலன் பிச்சைக்காரன் என்று தெரிந்தும் காதலைத் துறக்க முடியாமல் தவிக்கிறாள் காதலி. அவள் தரும் உதவியை ஏற்க மறுக் கிறான் காதலன். “நான் பிச்சையாகக் கொடுத்தா இதை வாங்கிக்கிறியா?” என்று அவள் பணத்தை நீட்ட, மண்டியிட்டு இரண்டு கைகளையும் ஏந்தி நிற்கும் அவனது கரங்களில் தன் முகம் புதைத் துக் காதலை அர்ப்பணிக்கும் காட்சி கவித்துவமானது. முதல் படம் என்று சொல்ல முடியாத படி நடித்திருக்கிறார் நாயகி சாத்னா.
விஜய் ஆன்ட்டனியே இசையமைத்திருக்கிறார். பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கு அவ்வளவு பொருத்தம். ஏக்நாத் எழுதியிருக்கும் அந்த ‘அம்மா’ பாடல், இன்னும் பல்லாண்டுகளுக்கு காற்றில் கலந்திருக்கும். பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு ஸ்பெஷல்! எந்த காட்சியையும் “போதும்ப்பா…” என்று ரசிகர்கள் அலுத்துக் கொள்வதற்குள் நறுக்கி நயம் சேர்த்திருக்கிறார் எடிட்டர் வீர செந்தில்ராஜ்.
படம் முழுக்க சசியின் சின்ன சின்ன ‘டச்’ அதை இன்னும் இன்னும் என்று அழகாக்கிக் கொண்டே போயிருக்கிறது. அட்மாஸ்பியரில் நடந்து போகிற காட்சிகளை கூட அவ்வளவு துல்லியமாக கவனித்திருக்கிறது அவரது கண்கள்.
நேர்த்தியான திரைக்கதை, நகைச் சுவை, வசனங்கள் ஆகியவற்றால் இந்தப் பிச்சைக்காரன் ஈர்க்கிறான். நாயக பிம்பத்தை முன்னிறுத்தும் காட்சிகளைக் குறைத்து யதார்த்தத்தைக் கூட்டியிருந்தால் படம் அலாதியான அனுபவமாக அமைந்திருக்கும்.
இயக்குனர்: சசி
தயாரிப்பாளர்: பாத்திமா விஜய் ஆண்டனி
கதை: சசி
நடிப்பு: விஜய் ஆண்டனி, சட்னா டைட்டஸ், மூர்த்தி, பகவதி பெருமாள், முத்துராமன், புவனேஸ்வரி.
இசையமைப்பு : விஜய் ஆண்டனி
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment